பீகார் சட்டப்பேரவைக்கான 2ம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 தொகுதிகளுக்கான இன்று இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவில் 91 தொகுதியில் மொத்தம் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள், வாக்களிக்க உள்ளனர். 

இதற்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஆயிரத்து 463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள், 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 பேரவைத் தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களும், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவா்களும் வாக்களிப்பதற்காக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் 12 மாநில அமைச்சா்கள் உள்பட 355 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், இந்தத் தேர்தல் முடிவு மாநிலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும். தற்போது சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 229 இடங்களில் பாஜகவுக்கு தற்போது 107 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெரும்பான்மை பெற வேண்டுமெனில் பாஜகவுக்கு இன்னும் 8 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே பாஜக, ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது பெரும்பான்மை பெறாமல் ஆட்சியை இழக்குமா என்பது இந்த இடைத்தேர்தலில் தெரியவரும்.

குஜராத் சட்டப் பேரவையில் காலியாக உள்ள 8 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 81 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கா் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓரிடத்துக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே