வேட்புமனு தாக்கல் நிறைவு – 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் வேட்பாளர்கள் மொத்தமாக மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

நேற்று வரை விறுவிறுப்பாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நல்ல நாளில் நல்ல நேரம் ஹோரை பார்த்துதான் மனு தாக்கல் செய்தனர்.

இன்று வளர்பிறை சஷ்டியாக இருந்தாலும் கரிநாள் என்பதால் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சிலரோ கரிநாள் என்றாலும் எமகண்ட நேரத்தில் பூனையை குறுக்கே விட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நிறைவடைந்தது.

இதுவரை 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சையாக மட்டும் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளைப் பார்த்தால் அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியில் கோவை தெற்கு தொகுதியில் 19 பேரும், அமமுக தலைவர் தினகரனின் கோவில்பட்டியில் 19 பேரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் தொகுதியில் இன்றைய தினம் கடைசி நேரத்தில் 8 பேர் மனு தாக்கல் செய்ய குவிந்தனர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

மனுக்களை வாபஸ் பெற 22ஆம் தேதி கடைசிநாளகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே