நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரமாக இருக்கும் நிலையில், அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பான செய்திக் குறிப்பொன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்களில் 490 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 40 ஆயிரத்துக்கும் குறைவாக 38 ஆயிரம் என்ற அளவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82.67 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் பலியாகினர்.

இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,23,097 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,41,405 ஆக உள்ளது. இது நேற்றைய அளவை விட 20 ஆயிரம் குறைவாகும். கரோனா பாதித்தவர்களில் 58,323 பேர் குணமடைந்ததை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 76.03 லட்சமாக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே