அனைத்து பள்ளிகளிலும் ஆழ்துளை கிணறுகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அவசர வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதில் பள்ளி வளாகங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக உள்ளதா?? என ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்புத் தொட்டிகள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி தரை மட்டத்திலிருந்து உயர்த்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பள்ளியில் உள்ள குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடிதம் எழுதி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே