சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் தந்தையும் மகனும் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவத்தைக் கண்டித்து நாளை நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் கூறியதாவது:

”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மர வணிகம் செய்து வரும் ஜெயராஜ் மற்றும் அலைபேசி வணிகம் செய்துவரும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். 

பொது முடக்கத்தின்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை திறந்து வைத்திருந்ததற்காக இந்த நடவடிக்கை என்கிறார்கள்.

அந்தக் கொடூரத் தாக்குதலின் விளைவாக அப்பாவி வணிகர்கள் இருவரும் இறந்த கோர சம்பவம், தொழில் வணிகத் துறையினரிடையேயும், பொதுமக்களிடமும் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் அப்பாவி வணிகர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளின் செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமல்லாது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு, தொழில் வணிகத் துறை சார்பாக, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேசன், தலைமைக் காவலர்கள், காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தொழில் வணிகத் துறைக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இக்கொடூரச் செயலுக்கு கண்டனம் தெரிவித்திடும் வகையிலும் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் கலந்து கொள்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதுடன், இறந்த இரு வணிகர்களின் ஆன்மா சாந்தி அடைய மாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றும்படியும் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு ஜெகதீசன் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே