சசிகலா மறைமுகமாக இரட்டை இலைக்கு வாக்களிக்கக் கூறியுள்ளார்: கடம்பூர் ராஜூ பேச்சு

சசிகலா மறைமுகமாக இரட்டை இலைக்கு வாக்களிக்கக் கூறியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். 2011-ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் கோ.ராமச்சந்திரனை 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அ.சுப்பிரமணியனை விட 428 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாகக் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசும்போது, ”மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா மனசாட்சிப்படி, மரியாதையாக அறிக்கை விட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக அவர் கூறியுள்ளார் என்பதுதான் எங்களின் கருத்து. இரட்டை இலை வெற்றி பெற்றால்தான் ஜெயலலிதாவின் ஆட்சி. இதைத்தான் சசிகலா மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிந்து சென்றபோது தினகரனின் நண்பர்களாக இருந்து நாங்கள், அவருக்கு வேண்டுகோள் வைத்தோம். எங்களுடைய வேண்டுகோளை டிடிவி தினகரன் ஏற்றிருந்தால் அவருடைய நிலைமையே வேறு. இந்த நிலைக்கு தினகரன் தள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. அன்று எங்களின் வேண்டுகோளை ஏற்காமல், உடன் இருந்தவர்களின் தவறான வேண்டுகோளை ஏற்றதால்தான், தினகரன் இப்படி இருக்கிறார்.

எங்களின் வேண்டுகோளை ஏற்றால் அவருக்குத்தான் நல்லது. அந்த வகையில் தேர்தலுக்குப் பிறகும் தினகரனுக்கு சில வேண்டுகோள்களை வைப்போம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் தினகரன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே