சினிமாவில் 11 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா: கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி!

’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமாவுக்கு வந்து இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். 

திருமணம் ஆனாலும் தமிழ் தெலுங்கில் தற்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இப்படம், கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியானது. சிம்பு, த்ரிஷா, சமந்தா, கெளதம் மேனன் ஆகியோரின் வாழ்க்கையில் முக்கியப் படமாக அமைந்தது.  இப்போதும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்தளவிற்கு படமும் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தமிழ் விண்ணைத் தாண்டி வருவாயாவில் சமந்தா சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்திருந்தார்.

ஆனால், தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமந்தா அறிமுகமானது ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில்தான். ஆனால், முதலில் வந்தது விண்ணைத்தாண்டி வருவாயாதான். இப்படமே சமந்தாவை தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக்கியது.

விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில், சமந்தா சினிமாதுறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே