#BREAKING : சச்சின் பைலட் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம்

அமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாணியில், ராஜஸ்தானில் துணை முதல்வராக இருக்கும் இளம் தலைவர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், அமைச்சர்கள் சிலரும் உடன் இருந்தனர். இதன் காரணமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் சூழல் உருவானது.

சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் விதமாக ரந்தீப்சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் தலைமை. 

ராகுல், சோனியா உட்பட முக்கிய தலைவர்களும் சச்சின் பைலட்டுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்பட்ட நிலையில் அவர் விடாப்பிடியாக இருந்து வந்தார்.

நேற்று இரவு முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இதில் சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இன்று காலை மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடந்தது.

முன்னதாக இதில் கலந்துகொள்ள வேண்டுமென சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநில தலைவர் பதவி பறிப்பு:

2வது முறையாகவும் இந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளாத நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மேலும் அவர் வகித்து வந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய மாநில காங்கிரஸ் தலைவராக கோபிந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களும் நீக்கம்:

சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட ரமேஷ் மீனா, விஷ்வேந்திர சிங் ஆகியோரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. புதிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக கனேஷ் கோக்ரா எம்.எல்.ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களின் அனைத்து சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இந்த அதிரடி முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளதாக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சச்சின் பைலட் நீக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து நிலையை விளக்கியுள்ளார்.

முன்னதாக சச்சின் பைலட் பாஜகவில் இணையமாட்டார் என அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்சமயம் அவரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது அமைச்சர் மற்றும் கட்சி பதவி பறிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் பைலட் ‘உண்மையை தோற்கடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே