‘எதற்கும் துணிந்தவன்’ என்பதாக தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் சூர்யா. சொந்தமாக பிசினஸ் கனவோடு இருந்த இளைஞனை ‘நேருக்கு நேரா’க சந்திக்க வைத்தது சினிமா.

1997-ல் தொடங்கிய சினிமா பயணம் பல தடைகளை தாண்டி பலருக்கும் பிடித்த நடிகராக அவரை முன்னிறுத்தி இருக்கிறது. அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • 1990களில் சூர்யா லயோலா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது அவரது தந்தை சிவக்குமாரிடம் ஜோதிடர் ஒருவர் சூர்யா எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவார் என சொன்னதை கேட்டு அவர் சிரித்தாராம்.
  • நடிகர் சூர்யா முதன் முதலாக விமானப் பயணம் செய்தது அவரை வளர்த்த லட்சுமி என்ற அத்தை பெண்ணின் திருமணத்திற்காக. தன்னை விட 15 வயது மூத்தவரான அவரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என சிறுவயதில் நினைத்திருந்தேன் என விளையாட்டாக சொல்வார் சூர்யா.
  • தொடக்க கால படங்களில் தனக்கு நடனம் சரியாக வரவில்லை என விமர்சனம் வந்த போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 8 மணி நேரம் என ஆறு மாதங்கள் வரை நடனப்பயிற்சி செய்துள்ளார் சூர்யா.
  • ‘நேருக்கு நேர்’ படத்தில் சிம்ரன் உடனான காதல் காட்சிகளில் நடித்தபோது கூச்சத்தால் கிட்டத்தட்ட 16 டேக் வரை போயிருக்கிறார். ‘சினிமாவில் கூட காதல் சரியா வராம சிம்ரன்கிட்ட திட்டு வாங்கியிருக்கேன்’ என அந்த சம்பவத்தை சொல்லி சிரித்திருக்கிறார்.
  • சிறுவயதில் தம்பி கார்த்தி உடன் பயங்கரமான சண்டைக் கோழியாக இருந்திருக்கிறார் சூர்யா. பின்னாளில் கார்த்தி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போது அழுது கொண்டே ஒரு பக்கத்திற்கு தம்பிக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார்.
  • சரவணனாக இருந்தவரை ‘நேருக்கு நேர்’ படத்திற்காக ‘சூர்யா’வாக மாற்றியது அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மணிரத்னம் தான்.
  • சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி மூலம் குழந்தைகளுக்கான படம், குடும்ப படங்கள், பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிகம் தயாரிக்க வேண்டும் என்பது சூர்யா- ஜோதிகா இணையரின் விருப்பம்.
  • கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால், தியேட்டர்கள் மூடப்பட்டு படங்கள் நேரடியாக ஓடிடி பக்கம் திரும்பிய போது திரையுலகிலும், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியது. அதையெல்லாம் தாண்டி தமிழில் முதலில் அந்த தளத்தில் வெளியான படம் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்தான்.
  • இதற்காக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவின் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த நேரத்தில் அவரது ‘சூரரைப்போற்று’ படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ என அடுத்தடுத்து சில படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளிவந்திருந்தாலும், நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரமாண்டமான வெற்றி பெற்றது.
  • ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இந்த வருடம் ஆஸ்கர் விருது பட்டியல் வரை சென்றது. அதில் சிறந்த நடிகருக்கான தேர்வில் சூர்யாவின் பெயரும் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மாணவர்களுக்கு இடையூறாக அமைந்த நீட் தேர்வு, விவசாய மசோதா, சமீபத்தில் பேசுபொருளாக அமைந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா என மத்திய அரசு கொண்டு வந்த பல விஷயங்கள் மக்களுக்கு இடையூறாக அமைந்த போது திரைத்துறையில் இருந்து தனது எதிர்ப்பை தயங்காமல் பதிவு செய்துள்ளார் சூர்யா.
  • அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி வந்த போது, ‘நேர்மையான குடிமகனாக மட்டுமே இருப்பேன். கல்வியில் நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டு. மற்றபடி அரசியலுக்கு நோ’ என்பதுதான் அவரது பதில்.
  • கமலின் தீவிர ரசிகரான சூர்யா கமல் நடித்த படங்களில் மிகப்பிடித்ததாக ‘நாயகன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை குறிப்பிடுவார்.
  • தான் நடிக்கும் படங்களை பெரும்பாலும் தியேட்டரில் பார்க்கும் வழக்கம் சூர்யாவிற்கு இல்லை.
  • தன்னுடைய ஆரம்பகால படங்களை மீண்டும் பார்ப்பதை தவிர்த்துவிடுவதாக சொல்வார். “அப்போது என்னுடைய நடிப்பு, நடனம் இதெல்லாம் பார்க்கும் போது ‘ஏன் இப்படி செய்திருக்கிறேன்’ என பார்ப்பதற்கு எனக்கே கூச்சமாக இருக்கும்” என்பார்.
  • ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘பேரழகன்’ ‘கஜினி’, ‘சிங்கம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட படங்கள் அவருடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தவை.
  • திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஜோதிகா. அவர் மீண்டும் வந்தது ’36 வயதினிலே’ திரைப்படம். இந்த படத்திற்கு இந்த தலைப்பு வேண்டாம் என நெருங்கிய வட்டத்தில் பலரும் மறுத்த போதும் ‘இதுதான் வேண்டும்’ என இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார் சூர்யா.
  • சமீபத்தில் ‘ராட்சசி’ படத்திற்கான விருது பெற்றபோது, ‘கோயில்களில் காட்டும் பராமரிப்பு கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை’ என மேடையில் ஜோதிகா பேசியது அரசியல் விவகாரமாகி சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளில் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு முழு ஆதரவு உண்டு’ என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.
  • பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் சிறுவயதில் சேட்டைகளின் மன்னன் என்றால் அது சூர்யாதான் என்கிறார் சிவக்குமார்.
  • சூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் இரண்டு பேருமே கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர்கள்.
  • தமிழை போலவே, தெலுங்கிலும் சூர்யாவின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் உண்டு.
  • கல்லூரியில் படித்துவிட்டு வேலை பார்த்து கொண்டு சொந்த பிசினஸ் என்ற கனவோடு இருந்தவரை ‘நீ 200% நடிகனாவதற்கு தகுதியானவன்’ என சொல்லி சூர்யாவை சினிமாத்துறைக்கு அழைத்து வந்தவர் நடிகர் மணிரத்தினம்.
  • ’36 வயதினிலே’ தொடங்கி ‘பசங்க2, ‘மகளிர் மட்டும்’, ‘சூரரைப்போற்று’ என இதுவரை 9 படங்களை தயாரித்திருக்கிறார் சூர்யா. அடுத்து அருண்விஜய், அவரது மகன் அர்னவ், விஜயகுமார் என மூன்று தலைமுறைகளும் ஒரே படத்தில் இணையும் படம், ஜோதிகா நடிப்பில் இன்னொரு படம் என தயாரிப்பாளராகவும் சூர்யா பிஸி.
  • ‘அஞ்சான்’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து ‘ஏக் தோ தீன்’ பாடலை பாடியிருக்கிறார் சூர்யா. இதை தவிர ‘சூரரைப் போற்று’ படத்தில் ‘மாறா தீம்’ பாடல், ‘பார்ட்டி’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
  • ‘நந்தா’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றிருக்கிறார் சூர்யா.
  • கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படமும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.
  • ஓடிடியில் வெளியாகும் அந்தாலஜி படமான ‘நவரசா’வில் நடித்திருக்கிறார் சூர்யா. மணிரத்தினம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் ‘கித்தார் கம்பி மேலே நின்று’. அடுத்த மாதம் வெளியாகிறது.
  • 1997ம் வருடம் இவர் நடித்த ‘நேருக்கு நேர்’ வெளியானது. சினிமாவில் நடிக்க வந்து 25வது வருடத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் சூர்யா.
  • இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அடுத்து இவரது நடிப்பில் ‘வாடிவாசல்’, அவரது 40வது படமான ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.
  • ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலமாக பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் சூர்யா. இதனால் பயன் அடைந்தவர்கள் நல்ல வேலையில் இருப்பதோடு அவர்களால் முடிந்த வரையிலும் அடுத்த தலைமுறை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ‘கதைதான் முதல் ஹீரோ. அடுத்ததுதான் நான். அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்கள் செய்து என்ன செய்ய போகிறேன்?’ என்பதுதான் சூர்யாவின் படங்கள் தேர்வுக்கான பதில்.
  • ஆரம்பகாலங்களில் படங்களில் நடிக்க சூர்யா முதலில் கதை கேட்ட பின்பு சிவக்குமார் கேட்பார். இருவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்றால் அடுத்த கட்டத்திற்கு நகரும்.
  • ஆரம்ப காலக்கட்டங்களில் அவர் நடித்த படங்களில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் சூர்யாவிற்கு பிடித்த ஒன்று.
  • தன்னுடைய சினிமா பயணம், வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ‘இப்படிக்கு சூர்யா’ என்ற புத்தகம் எழுதியுள்ளார்.
  • நடிக்க போகிறேன் என நண்பர்களிடம் சொன்ன போது ‘நீ நடிக்கிறியா?’ என கேட்டு சிரித்திருக்கிறார்கள். ‘என்னால் முடியாது என்று எதாவது சொன்னால் அது பொய் என்று நிரூபிக்க வேண்டும் என நினைப்பேன்’ அப்படிதான் நடிக்க ஆரம்பித்தது என்று தனது சினிமா பயணம் ஆரம்பித்த கதையை நினைவு கூறுவார் சூர்யா.
  • சூர்யாவின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் எதாவது ஒரு தீமில் பிறந்தநாள் கேக் செய்து தருவது ஜோதிகாவின் வழக்கம்.
  • அதேபோல, பிறந்தநாளன்று பெரும்பாலும் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார் சூர்யா.
  • சூர்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒருவர்.
  • ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதே தலைப்பில் 1977-ல் அவரது தந்தை சிவக்குமார் நடிப்பிலும் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே