அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம் – இமான் நெகிழ்ச்சி..

தேசிய விருது அறிவிப்புக்குப் பின் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொண்டாட்டம் குறித்து இசையமைப்பாளர் இமான் மனம் திறந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. முதல் தேசிய விருதைப் பெற்றிருக்கும் இசையமைப்பாளர் டி.இமான் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ ‘கண்ணான கண்ணே’ பாடல் முதலில் ஒரு வெர்ஷனை இயக்குநர், தயாரிப்பாளரிடம் கொடுத்திருந்தேன். அந்தப் பாடல் அவர்களுக்கு பிடித்திருந்தது. ஆனாலும் நான் அதைவிட சிறப்பாக மற்றொரு வெர்ஷனை கொடுக்க வேண்டும் என்று நினைத்து இயக்குநரிடம் தெரிவித்தேன். இரண்டாவதாக கொடுத்த பாடல் தான் இறுதி செய்யப்பட்டது. என்னுடைய கருத்தை ஏற்று எனக்கு சுதந்திரம் கொடுத்தது எனக்கான பொறுப்பை இன்னும் கூட்டியது. எனக்கான சுதந்திரத்தை இயக்குநரும், முன்னணி நடிகரான அஜித்தும் கொடுத்தார்கள்.

இந்தமுறை தான் தேசிய விருது அறிவிப்பை லைவ்வாக பார்த்திருக்கிறேன். என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்ட தருணத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். அதைத்தொடர்ந்து பலரும் எனக்கு போனில் அழைத்து வாழ்த்தினார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு வாழ்த்து தெரிவித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய பாடல் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். பிருந்தா மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்த போது ரஜினிகாந்த் எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை மைக்கில் அறிவிக்க சொல்லியிருக்கிறார். படக்குழு கை தட்டி பாராட்டியிருக்கிறார்கள். நான் வாகன நெரிசலில் சிக்கியதால் அரை மணி நேரத்துக்குப் பின்னர் தான் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றேன். அங்கு ஸ்பெஷலாக எனக்காக கேக் வெட்டி கொண்டாடினார்கள். இயக்குநர் சிவாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இத்தனை வருடம் நான் பணியாற்றிய நபர்களில் எனக்கு மிகவும் பிடித்த நபர்.

அண்ணாத்த படத்துக்காக நான் இதுவரை 4 பாடல்களை முடித்திருக்கிறேன். மொத்தம் 6 பாடல்கள் இருக்கும். நான் புரசைவாக்கத்தில் வசித்த போது படையப்பா படத்தை ரசிகனாக பார்த்திருக்கிறேன். அப்போது ஓபனிங் பாடல் சிங்கநடைபோட்டு பாடலைக் கேட்டு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். ஆனால் இப்போது என்னுடைய இசையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி குரலில் ‘அண்ணாத்த’ ஓபனிங் பாடல் திரையில் வர இருக்கிறது. இதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

என்னுடைய இசையைத் தாண்டி அசுரன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையும், தனுஷின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது” இவ்வாறு இமான் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய், அஜித், உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததாக தனது ட்விட்டரில் இமான் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே