தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது.

முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில், அவருக்கு கே.என்.நேரு தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறிது நேர ஓய்வுக்கு பின் மதியம் 1 மணியளவில் ஸ்டாலின், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

மாநாட்டுத் திடலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.

பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்க உரை ஆற்றினார். ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

திமுகவின் கனவுகளை அறிவிக்கும் கூட்டம்:

தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு என்று ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலில் போட்டியிட திமுக முதல்முறையாக முடிவு செய்த இடம்தான் திருச்சி மாநகரம். திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது. அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது.

வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனக் கூறினார்.

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்..

தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் கீழ் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் பின்வருமாறு:

* குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை அளிக்கப்படும்

* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

* பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்.

* கிராமப்புறங்களில் 20 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

* கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்படும்.

* கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு 10 ஆண்டுகளில் வழங்கப்படும்.

* குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் வழங்கப்படும்.

* தமிழகத்தின் பசுமை பரப்பளவு 25% உயர்த்தப்படும்.

* எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.

* வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு துறையின் கீழ் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை.

* அனைவருக்கும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் இலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

திமுக ஆட்சிக்க்கு தொடக்கப்புள்ளி வைப்போம் என்று பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே