மன்னிப்பு கேட்க மறுத்த ரஜினி – ஆதரவும், எதிர்ப்பும்!

ரஜினியின் “யாரிடமும் மன்னிப்புக் கேட்க முடியாது” என்ற பேச்சிற்கு அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும், ஆதரவையும் பதிவு செய்துள்ளனர்.

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தெரிவித்தார்.

அப்போது, பெரியார் குறித்த பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று கூறிய அவர், புகைப்பட ஆதரமாக அவுட்லுக் பத்திரிகையில் வெளியான தகவல்கள் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மன்னிப்புக் கேட்க முடியாது என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவையும், கண்டன குரல்களையும் பதிவு செய்துள்ளனர்.

ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்பதாகவும், விநாயகர் சிலையை சாலையில் வீசியவர்கள் இந்து விரோதிகள் என்றும் ரஜினிகாந்தின் பேச்சிற்கு ஆதரவு தெவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள அவர், யாருடைய நம்பிக்கையையும், கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார் என ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் குறித்த ரஜினிகாந்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அனைத்துப்பிரிவு மக்களுக்கும் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தை கடுமையாக சாடிய திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, மன்னிப்புக் கேட்பதும், வருத்தம் சொல்வதும் மனிதப் பண்புக்கு அடையாளம் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்பதற்கு இதுவே முன்னோட்டமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மை என்று ரஜினிகாந்த் ஏற்பாரா எனவும், அவர் பற்றிய செய்திகளை நம்புவாரா எனவும் கீ.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியது அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். கடுமையாக மூடநம்பிக்கைகளை எதிர்த்தாலும், நாகரீகமாக நடந்து கொள்பவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி காட்டிய பத்திரிகையில் ராமர், சீதை படங்கள் அவதூறான வகையில் இல்லை என குறிப்பிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மறக்கவேண்டிய சம்பவத்தை ரஜினி 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு ஹெச்.ராஜா முட்டுக் கொடுப்பதாகவும், பாஜகவிற்காக நடிகர் ஆதரவாக பேசியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி தெரிவித்த பதில் பித்தலாட்டமானது என்றும், பத்திரிகையில் வெளியான செய்தி என அசலை காட்டாமல், நகலை காட்டி ஓடிவிட முடியாது எனவும் திரவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே