உயரும் கடல் நீர் மட்டம்: 2050க்குள் சென்னை மூழ்கும் அபாயம்?

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2050ஆம் ஆண்டில் சென்னை, மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மூழ்கடிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இதனால் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிளைமேக்ஸ் சென்ட்ரல் என்ற நிறுவனம் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நாடுகளில் 75 சதவிகிதம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு ஆசிய நாடுகள் பேராபத்தை எதிர்நோக்கி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வால் உலக அளவில் நிலப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கிளைமேக்ஸ் சென்ட்ரல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2100-லில் நிலத்தில் வசிக்கும் மேலும் 20 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஒடிசா, குஜராத்தின் கடலோர மாவட்டங்கள், கேரளாவின் கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் மட்டம் உயர்ந்து வருவதும் அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இதில் சென்னை மிகவும் அபாயகரமான பகுதியில் அமைந்திருப்பதாகவும் கிளைமேக்ஸ் சென்ட்ரல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடல் மட்ட உயர்வால் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த எண்ணிக்கை கிளைமேக்ஸ் சென்ட்ரல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கணிக்கப் பட்டதை விட ஏழு மடங்கு அதிகமாகும்.

கார்பன் உமிழ்வை குறைக்க நடவடிக்கை எடுத்தால் கடல் மட்ட உயர்வை தடுத்து இந்த பேராபத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே