CAA-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் தேசிய குடியுரிமை திருத்தச் சடடத்தை திரும்பபெற கோரி மத்திய அரசை வலியுறுத்தி, பல்லாவரம் வட்டார ஐக்கிய ஜமாத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர், பொதுமக்‍கள் என ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் திரு. அருணன், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அபத்தானது அல்ல இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் ஆபத்து என கூறினார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி குமரன் நகர் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கையில் பதாகைகளை ஏந்தியபடி, கண்டன முழக்‍கமிட்டனர்.

இதில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இடதுசாரி கட்சிகள், வரும் 8-ம் தேதி அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

இதனை விளக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தேசத்தின் இறையாண்மையை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிக்கு வழங்கக்‍கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசைக்‍ கண்டித்து, வரும் 8-ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் சி.பி.எம், சி.பி.ஐ., ஆகிய கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக்‍ கூறி அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நித்திரவிளை சந்திப்பில், காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் கடற்கரை சாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்‍குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே