கொரோனா பரவல் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

சொந்த நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறபோது, தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதாக அவர் விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு பிரதமர் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள மமதா, 2021-ம் ஆண்டின் நிர்வாக திட்டமிடலுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும் சாடியுள்ளார்.

பா.ஜ.க.வால் குஜராத்தில் கூட கொரோனா வைரஸ் அதிகரிப்பை சமாளிக்க முடியவில்லை என்றும், அத்தகைய ஒரு நெருக்கடியான சூழலுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் பிரதமர் கொண்டு வந்துவிட்டதாகவும் மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதை தொடர்ந்து ட்விட்டரில் #ResignModi என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே