அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரணடாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அதனொரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு நேரங்களில் தனியார், பொது பேருந்துகள் மற்றும் அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் தற்போது இதுகுறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி அளித்த தகவலில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரயில்வேக்கு, ரயில்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை.

எனவே தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரயில்களும் முழுமையாக இயங்கும். எனவே ஊரடங்கு காரணமாக ரயில்கள் சேவை பாதிக்கப்படாது என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே