7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திவரும் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்யப்படும் என ஆளுநர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
ஆனால், அந்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வக்கீல் ஏ. நடராஜன் வாதிடும்போது, தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தமிழக ஆளுனர் எந்த ஒரு முடிவையும் எடுக்காத வரை ஆளுநரின் அதிகாரம், செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
தமிழக அரசு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று பரிந்துரை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்தது.
ஆளுநரின் முடிவு வரும்வரை நளினி சட்டபூர்வமான காவலில்தான் உள்ளார்.
இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்காக தொடர முடியாது என்று வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் வாதிடும்போது, மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய மாநில அரசு, மத்திய அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
விடுதலை செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும்.
ஆயுள் தண்டனை என்பது ஆயுள்காலம் முழுவதும் என்று, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது.
அதன் அடிப்படையிலேயே நளினி தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டபேரவையில் அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், தற்போது, ராஜு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமென்று ஆளுநர் தெரிவித்திருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் கூறியுள்ளார்.