அரசியலாக்கப்படுகிறது நிர்பயா வழக்கு விவகாரம் – நிர்பயாவின் தாய் குற்றச்சாட்டு

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டுவருவதாக அவரது தாயார் ஆஷா தேவி குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு, இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாகி விட்டது.

ஆனால், குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக மாற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது விஸ்வரூபமெடுக்கிறது.

குற்றவாளிகளுக்கு 22ம் தூக்கு என எதிர்பார்த்த நிலையில் தற்போது, அது அடுத்த மாதம் ஒன்றாம் தேதியாக மாற்றப்பட்டிருப்பது இந்த குற்றச்சாட்டை மேலும் கூர்மை படுத்தி இருக்கிறது.

பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு என்பது சர்வதேச அளவில் பேசப்படும் விவகாரமாக மாறும் என்பதை பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் அறிந்தே உள்ளனர்.

இதன் ஆதாயத்தை அறுவடை செய்ய போவது யார் என்ற போட்டி நிலவுவதாக ஆரூடம் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தமது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதிகேட்டு 2012-ம் ஆண்டு போராடிய ஆம் ஆத்மி, பாஜக இரண்டு கட்சிகளும் இப்போது இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசமே பேசி வரும் நிலையில், தாங்கள் பெண் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி அவற்றை வாக்குகளாக அறுவடை செய்ய ஆம் ஆத்மியும், பாஜகவும் முயல்கின்றன என்பதே தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு.

இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை தேர்தல் களமே முடிவு செய்யும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே