தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் துவக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை சார்பில் பின்வரும் அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
1. பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும்.
2. கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கி சேவையினை அளிக்கும் பொருட்டு, 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஒரு நகரக் கூட்டுறவு வங்கி, ஒரு நகர கூட்டுறவுக் கடன் சங்கம், ஒரு தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஒரு பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.
3. வணிக வங்கிகளுக்கு இணையாக, புதிய வசதிகளுடன் கூடிய நவீன வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட ஏதுவாக, 74 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள், 14.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
4. புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக் கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும், 17.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
5. சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் 15.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
6. காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும்.
7. அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பினை பெரியளவில் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் அறிவித்தார்.
மேலும், உணவுத் துறை சார்பில் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. நெல் உலர்களன் வசதியுடனும், நவீன நெல் சேமிப்பு கொள்கலனுடனும் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
2. 30 வருடங்களுக்கு மேலான, எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐஐடி- யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
3. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வேளாண் பெருமக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகங்களில் அமைந்துள்ள சேதமடைந்த சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும்.
இதன் மூலம் இவ்வளாகத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களினால் பழுது ஏற்படாமல், கான்கிரீட் சாலைகள் நீண்ட காலத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் முதல்வர்.