பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய அரசே காரணம் – பிரதமர் மோடி சாடல்..!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், நடுத்தர குடும்பத்தினரின் சுமைக்கு முந்தைய அரசே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியது:

நம்மைப் போன்ற ஒரு பன்முகத்தன்மையுடைய மற்றும் திறமையான தேசம் ஆற்றல் இறக்குமதியைச் சார்ந்து இருக்க முடியுமா?

நான் யாரையும் விமரிசிக்க விரும்பவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் நம்முடைய நடுத்தர வர்க்கத்தினர் சுமையை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

நடுத்தர மக்களின் கவலைகளை அரசு உணர்கிறது. அதனால்தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவும் வகையில் நாடு எத்தனால் மீது கவனம் செலுத்துகிறது.

அனைவருக்கும் குறைந்த, கட்டுப்படுத்தப்பட்ட விலையில், எரிவாயு கிடைக்க “ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு” என்ற இலக்கு எட்டப்படும் என்றும், அதற்கென புதிய நெட்வொர்க் கட்டமைப்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல் விலை உயர்ந்ததையடுத்து, ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐத் தொட்டுள்ளது.

இந்த நிலையில் முந்தைய அரசை மறைமுகமாக விமரிசிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே