இந்தியாவின் போராட்ட வரலாற்றை கொஞ்சமாவது படியுங்கள் ரஜினி சார்-ஆளூர் ஷா நவாஸ்

ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் போராட்ட வரலாற்றை கொஞ்சமாவது படியுங்கள் ரஜினி சார் என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட நாட்டில் பல நகரங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்துவருகிறது.

இந்த நிலையில், நேற்று ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது; தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC பற்றி ரஜினிகாந்த் எதுவும் கூறாமல், போராட்டங்களை மட்டும் மையப்படுத்தி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதற்கு பல தரப்பிலும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில், பெங்களூரில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டதை மையப்படுத்தி ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில், திரு ரஜினிகாந்த், நீங்கள் பிறந்த பெங்களூரில் நடந்த அரச ஒடுக்குமுறை இது. போலீஸ் இழுத்துச் செல்லும் இவர் வன்முறையாளர் அல்ல; வரலாற்று ஆய்வாளர்.

உங்கள் மொழியில் சொல்வதெனில் சமூக விரோதி.
இந்தியாவின் போராட்ட வரலாற்றை கொஞ்சமாவது படியுங்கள் ரஜினி சார் என்று ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே