10,11 மற்றும் 12-ம் வகுப்பு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியானது

10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகி வருவதால் ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகளும் கடந்த 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

சமூகவலைதளமான HELO அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ள சூழலில், அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்றைய தினமே ஹலோ ஆப்-ல் வெளியானதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் இன்று காலை நடைபெற உள்ள 12-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு வினாத்தாளும் தேர்வு நடைபெறுவதற்கு இரு நாட்கள் முன்னரே ஹலோ ஆப்-ல் வெளியாகி உள்ளது.

கடந்த 18-ம் தேதி பிற்பகலில் நடைபெற்ற 11-ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாளும் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு ஹலோ ஆப்-ல் வெளியான சம்பவம் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கேற்ப வினாத்தாள்களை தேர்வுத்துறை தயாரித்து, தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்வுக்கான வினாத்தாள்கள் ஹலோ ஆப்-ல் முன்கூட்டியே வெளியாவதால், ஒரு சில பள்ளிகள் அரசின் பொது வினாத்தாளை பயன்படுத்தாமல் அவர்களே சுயமாக வேறு புதிய வினாத்தாளை அச்சடித்து தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் பெரும்பாலான பள்ளிகளில் சமூகவலைதளங்களில் வெளியான வினாத்தாளைக் கொண்டே தேர்வுகள் நடைபெறுவதால், வினாத்தாளை பார்த்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களையும், படிக்காத மாணவர்கள் குறைவான மதிப்பெண்களையும் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே