தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்ப்பு..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் சிலர் ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தியதால் மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

அதன்படி, கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை முதல் இ பதிவு முறை தொடங்கப்பட்ட நிலையில் மாலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே