டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை..!!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திர அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக400 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது இந்த சாதனைப் படைத்தார்.

34 வயதாகும் அஸ்வின் தனது 77-வது டெஸ்ட் போட்டியில் 400-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

உலகளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது சுழற் பந்துவீச்சாளர் எனும் பெருமையை அஸ்வின் பெற்றார்.இந்திய அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் அஸ்வின்.

இதற்குமுன்பாக கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால், அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை அஸ்வின் செய்துள்ளார்.

உலகளவில் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக ,அதாவது குறைந்த போட்டியில் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் எனும் சிறப்பை அஸ்வின் பெற்றார்.

முத்தையா முரளிதரன்(72-வது டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், நியூஸிலாந்தின் ரிச்சார்ட் ஹார்ட்லி ஆகியோரை முறியடித்து அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹாட்லி, ஸ்டெயின் இருவரும் தங்களின் 80-வது டெஸ்ட் போட்டியில்தான் 400 விக்கெட்டுகளை எட்டினர்.

அஸ்வின் ஏற்கெனவே அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும், ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகள், 200 விக்கெட்டுகளையும் வேகமாக எட்டியவீரர் எனும் பெருமையையும் அஸ்வின் தன்னகத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் கும்ப்ளே(619), கபில் தேவ்(432), ஹர்பஜன் சிங்(417) ஆகியோர் இதற்குமுன் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே