நீரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு..!!

இந்தியாவில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனில் வசித்து வரும் வைர வியாபாரி நீரவ் மோதியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கு எதிரான வழக்கு நடைபெறும் மும்பை ஆர்துர் நீதிமன்றமே அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க சரியானதாக இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு நீரவ் மோதி நாடு கடத்தப்படும்வரை அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் வாதங்கள் நடந்தபோது, “நீரவ் மோதியின் மன நலன் மோசமடைந்து வருகிறது. 

பெருந்தொற்று காலத்தில் இந்திய சிறைகளின் மோசமான நிலை காரணமாக அங்கு அவர் காவலில் வைக்கப்பட்டால் அவரது உடல்நிலை பாதிப்படையும்,” என்று கூறப்பட்டது.

இருப்பினும், வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸீ, இந்தியாவுக்கு நீரவ் மோதி நாடு கடத்தப்பட்டால், அங்கு மனித உரிமைகளை மதித்து அவர் நடத்தப்படுவார் என இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று குறிப்பிட்டார்.

மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

எனவே, தற்போதைக்கு மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை வைத்து நீரவ் மோதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்றே அங்குள்ள சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, நாடு கடத்தக்கோரும் இந்திய அரசின் கோரிக்கையை பரீசிலித்த நீதிபதி தனது தீர்ப்பில், இந்தியாவில் தொழில் செய்த நீரவ் மோதி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், தனக்கான கடன் மற்றும் நிலுவைகளை திருப்பிச் செலுத்துவதாக உறுதி அளித்தார்.

அவருடன் கூட்டு சேர்ந்ததாக கூறப்பட்டவர்கள் பினாமிகள் என தெரிய வந்ததால் அது தொடர்பாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரித்து வருகிறது.

நீரவ் மோதிக்காக பல நிழல் நிறுவனங்கள் இயங்கி வந்ததும் இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவற்றைப் பார்க்கும்போது இந்தியாவில் நீரவ் மோதி செய்து வந்த தொழில் சட்டப்பூர்வமானதாக இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

இவை அனைத்தும் பணப்பரிவர்த்தனை தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்த முகாந்திரம் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் தன் மீதான வழக்கை நீரவ் மோதி இந்தியாவிலேயே எதிர்கொள்வதுதான் சரியானதாக இருக்கும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

அடுத்தது என்ன?

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிரிட்டன் உள்துறை செயலாளர் ப்ரீத்தி படேலின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும்.

அதன் பிறகே இந்த வழக்கின் உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை பிரிட்டன் வெளியுறவுத்துறையும் இந்திய வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.

இந்த வழக்கு விசாரணையையொட்டி, 49 வயதாகும் நீரவ் மோதி, தென்மேற்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் அடைக்கப்பட்ட வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் இருந்தபடி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

2019ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், நாடு கடத்தப்படும் கைது வாரன்டை காண்பித்து அவரை லண்டனில் உள்ள காவல்துறையினர் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து நீரவ் மோதி சார்பில் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டால் அவர் விமானம் மூலம் தப்பி விடலாம் என்று கருதியதால் அந்த மனுக்கள் நிராகரிப்படுவதாக நீதிமன்றம் கூறியது.

வைர வியாபாரியான நீரவ் மோதி இரண்டு வகை வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். ஒன்று பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு பெற்ற கடனுக்கு உத்தரவாதம் பெற போலி கடிதங்களை ஜோடித்தது தொடர்பான சிபிஐ வழக்கு.

மற்றொன்று, பணப்பரிவர்த்தனை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு.

இது தவிர சாட்சிகளை மிரட்டியது, தடயங்களை அழிக்க முற்பட்டது போன்ற தனி வழக்குகளையும் அவருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் சிலருடன் கூட்டு சதி செய்து கடன் உத்தரவாத கடிதங்களை மோசடியாக ஜோடித்து பணம் பெற்றதாகவும் இதற்காக தனக்கு சொந்தமான டைமண்ட் ஆர் யு, சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை அவர் பயன்படுத்தியதாகவும் லண்டனில் இந்திய அரசுக்காக வழக்காடிய க்ரெளன் பிராசிக்யூஷன் சர்வீஸ் என்ற நிறுவனம் குற்றம்சாட்டியது.

தனது தேவைக்காக உருவாக்கப்பட்ட நிழல் நிறுவனங்களின் நிர்வாகிகளை மிரட்டியது தொடர்பான காணொளிகளையும் வழக்கு விசாரணையின்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதின்றத்தில் போட்டுக் காட்டினர்.

ஆனால், நீரவ் மோதிக்காக ஆஜராகிய வழக்கறிஞர் கிளேர் மொன்ட்கொமெரி தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு, தவறான ஆலோசனையின்பேரில் பட்டப்பகலில் பொதுவெளியில் நடந்த வர்த்தக பிரச்சனை இது என்றும், சட்டத்தை மீறும் வகையிலோ மோசடி தொடர்பானதாகவோ அந்த செயல்கள் கருதப்படக்கூடாது என்றும் வாதிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே