இராமநாதபுரம் : கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14-ஐ தொட்டது.

தமிழகத்தில் நேற்று வரை 1,683 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்.23 வரை 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று பரமக்குடி வைசியாள் வீதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மற்றும் சி.ஆர்.தாஸ் தெருவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆனது.

இந்நிலையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சேதுநகர் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

மாவட்டத்தில் இதுவரை 1,138 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று வரை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 981 பேருக்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மீதி 145 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 நபர்கள், 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து கரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் 5 கி.மீட்டர் சுற்றளவில் கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்கு வீடு, வீடாக கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் மக்கள் வெளியே செல்லவும், வெளியிலிருந்து உள்ளே வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்களுக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே