சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா…!

சென்னையில் பிரபல பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று இன்று தமிழகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவ பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டை மிண்ட் தெருவை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் காய்ச்சல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தம்பதிகள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.

இதில் ஆண் நபர் டெல்லிக்கு வியாபார நிமிர்த்தமாக சென்றுவிட்டு வந்து வேளச்சேரி மாலிற்கு சென்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தமிழ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

அதில் இந்த தம்பதியர் இருவரும் அடங்குவர்.

இதையடுத்து தம்பதிகளின் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த தம்பதியுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் சென்னை மாநகராட்சி 3வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தம்பதி வசித்து வரும் மிண்ட் தெருவை மூடி சீல்வைத்தனர்.

அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளைத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை மண்ணடி மரைக்கான் தெருவில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த தெருவும் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் மால்க்கு சென்று வந்தவர்களுக்கு முதல்முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பையும், மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே