மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் : ஆந்திர அரசு

மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 91 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் 1400 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 91 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் 1400 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது :
”ஆந்திராவில் கரோனாவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 1400 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

8.78 லட்சம் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 91 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் மொத்தம் 1400 கோடி ரூபாய் பணத்தை கடனாக வழங்கவுள்ளோம்.

இதற்கு வட்டி ஏதும் கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தொகையை மட்டும் அவர்கள் திருப்பிச் செலுத்தினால் போதுமானது.” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே