நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்க வாய்ப்பில்லை எனக்கூறிய மத்திய அரசு இறுதிப் பருவத் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவதில் அக்கறை காட்டுவது ஏன் என வினவியுள்ளார்.

கொரோனாவால் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு, இறுதிப் பருவத் தேர்வை நடத்துவோம் என்பது எந்த வகையில் நியாயம்? இந்த விஷயத்தில் அரசின் பிடிவாதம் தேவையற்றது எனவும்; அது கைவிடப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நுழைவுத் தேர்வுகள் தொடங்க இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று எதன் அடிப்படையில் மத்திய அரசு நம்புகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ள சூழலில், தற்போது நுழைவுத் தேர்வுகளையும், இறுதிப்பருவத் தேர்வுகளையும் நடத்துவது மிகவும் ஆபத்தானது என்றும்; மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும்; இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே