வேளாண் சட்டங்களில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் காங்கிரஸின் முயற்சி வெற்றி பெறாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
”புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயப் பொருட்களை வாங்கும் மண்டி முறையை அழித்து குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சி விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால், விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் காங்கிரஸின் முயற்சி வெற்றி பெறாது.
ஏனென்றால் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் என்பதுதான் உண்மை.
ஒரு சீர்திருத்தம் செயல்படுத்தப்படும் போதெல்லாம் அது நேர்மறையான முடிவுகளை எட்டுவதற்கு சில ஆண்டுகள் ஆகும்.
1991-ல் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அல்லது வாஜ்பாய் அரசாங்கத்தின்போது இயற்றப்பட்ட சட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் சாதகமான பலன்களைக் காண நான்கைந்து ஆண்டுகள் ஆயின.
இதேபோல், நான்கைந்து ஆண்டுகள் நம்மால் காத்திருக்க முடியாதா? நரேந்திர மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விவசாய சீர்திருத்தங்களின் நேர்மறையான முடிவுகளைக் காண குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது காத்திருக்க வேண்டும்”.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.