பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டா மேற்கொள்வார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2019ல் நடந்த தேர்தலில், நாடாளுமன்ற கோட்டையை பாஜக கைப்பற்றினாலும், அதற்கு முன்பு நடந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஆட்சியை இழந்தது.
தொடர்ந்து நடைபெற்ற, மகாராஷ்ட்ர சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தபோதிலும் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை.
காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற விவகாரங்கள் பாஜகவிற்கு கடும் சவால்களை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், பாஜகவின் தேசியத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா.
உள்துறை அமைச்சராக இருக்கும், அமித்ஷா தலைமையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், 2019 ஆம் ஆண்டு வரை பாஜக இந்தியா முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்தது.
அவரைப் போலவே, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்குவார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அரசாங்கம் இந்திய மக்களுக்கு நீண்ட காலம் சேவை ஆற்ற உள்ளதால், அதற்கு நட்டாவின் கட்சி செயல்பாடு பக்க பலமாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார். எதிர்காலத்தில் பாஜகவிற்கு அதிக சங்கடங்கள் வரலாம் என்றும் அதனை எதிர்கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவின் முன்பு, டெல்லி தேர்தல் உடனடி சவாலாக இருக்கிறது.
டெல்லியில் நாடாளுமன்ற அரியணையில், பாஜக அமர்ந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, டெல்லியை கைப்பற்றாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய கவுரவப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
இதே போல், அடுத்தடுத்து பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், பாஜக தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கு ஜே.பி.நட்டா என்னென்ன வியூகங்களை வகுக்கப்போகிறார் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.