மத்திய அரசை விமர்சிக்கும் ராகுல்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 10 லட்சம்பேரில் 149 இந்தியர்களுக்குத்தான் சோதனை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிக எண்ணிக்கையில் சோதனைகள் நடத்தினால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்தது.

இந்த ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.

ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கு முடிந்தாலும், மே 1-ம்தேதி உழைப்பாளர் தினம், அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் ஊரடங்கு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 

‘சோதனை செய்யும் கருவிகளை வாங்குவதில் இந்தியா தாமதம் செய்திருக்கிறது. 10 லட்சம் இந்தியர்களில் 149 பேருக்குத்தான் நாம் பரிசோதனை செய்கிறோம். கொரோனா பரிசோதனையில் நாம் லாவோஸ் (157), நைஜர் (182), ஹோண்டுராஸ் (162) நாடுகளுடன் நாம் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தினால் மட்டுமே கொரோனாவை நாம் கட்டுப்படுத்த முடியும். அப்படிப் பார்க்கையில் நாம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்றுதான் தெரிகிறது’ என்று கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்துள்ளது. 339 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

நாட்டில் கொரோனா பரிசோதனைகள் குறைந்த எண்ணிக்கையில் நடத்தப்பட்டுள்ளன. இதனால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ என்று சில மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

திங்களன்று இரவு 9 மணி நிலவரப்படி சுமார் 2 லட்சம் பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே