திமுகவுக்கு ஆதரவாக அலையல்ல; சுனாமியே அடிக்கிறது; அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது: ஸ்டாலின்

திமுகவுக்கு ஆதரவாக அலையைத் தாண்டி சுனாமி அடித்துக் கொண்டிருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 01), மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தில் பேசியதாவது:

இன்றைக்கு முதல்வர் பழனிசாமி கூடலூருக்கு ஹெலிகாப்டரில் வந்துள்ளார். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இதே நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது ஹெலிகாப்டரிலாவது வந்து பார்த்தாரா? அப்படிப்பட்ட பழனிசாமிக்கு இந்தத் தேர்தலில் பாடம் வழங்க வேண்டும். அன்றைக்கு நான்தான் வந்தேன்.

அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் திமுக தலைமையில் இருக்கும் அணிதான் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது என்று வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட இரு தமிழ்த் தொலைக்காட்சிகளில் திமுகதான் வெற்றி பெறும் என்ற செய்தியைப் பார்த்தவுடன் ஆளுங்கட்சிக்காரர்கள் அந்த நிறுவனங்களை மிரட்டி இருக்கிறார்கள். அரசு கேபிளில் இருந்து துண்டித்திருக்கிறார்கள். இவை எல்லாம் இன்னும் நான்கு நாட்கள்தான். ஏப்ரல் 6 அன்று உங்கள் முகமூடியைக் கிழிக்கப் போகிறோம். அதற்குப் பிறகு உங்கள் கதை என்ன ஆகப்போகிறது என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

சிலர் அலையே அடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அலையைத் தாண்டி சுனாமி அடித்துக் கொண்டிருக்கிறது. பழனிசாமிக்கு ஆளுமைத் திறமை இல்லை என மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் பிரதமராக இருக்கும் மோடி தாராபுரத்திற்கு வந்து பேசியிருக்கிறார். அங்கு திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

திமுக ஆட்சி இருந்தபோது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாச்சியில் வந்து கேளுங்கள்.

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

இப்போது இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள். இது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். இந்த அலை அவர்களை அடியோடு அகற்றப்போகிறது. அதுதான் உண்மை.

பாஜக வரப்போவதில்லை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்கப் போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது”.

இவ்வாறு  பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே