உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20லட்சத்து 17ஆயிரத்தை கடந்துள்ளது.
ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக இருந்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,204ல் இருந்து 1,242 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக பரிசோதனை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 994 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 117 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 26 லெப்கள் மூலம் 5320 பேருக்கு ஒரு நாளைக்கு டெஸ்டிங் செய்யபடிகிறது. இன்று கொரோனா வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது” என கூறினார்.