ராதாபுரம் தொகுதி: மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 19ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 21 சுற்றுகளாக நடத்தப்பட்ட நிலையில் 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டதாகவும், கடைசி மூன்று சுற்றுகள் சரிவர எண்ணப்படவில்லை என்றும் கூறி திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைசி சுற்றுகளில் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே