ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு வாபஸ்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடைக் கோரிய வழக்குத் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்தது.

அதன்படி நினைவு இல்லமாக மாற்றுவதற்கான ஆய்வு பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் செய்து வருகின்றன.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு பல கோடி ரூபாய் செலவில் நினைவு இல்லம் கட்டுவது இயற்கை நீதிக்குப் புறம்பானது.

எனவே வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுக்கு மின்ஞ்சலில் அனுப்பிய தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் அரசுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்கும்படி கோருவதை எப்படி விசாரணைக்கு ஏற்பது என கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வழக்கைத் திரும்பப் பெற டிராபிக் ராமசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே