திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருடசேவை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது.

இன்று காலை மலையப்ப சுவாமி நமோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் திருமாட வீதிகளில் வீதி உலா வந்தார். அப்போது வீதிகளில் இரு புறமும் கூடி இருந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

சுவாமி ஊர்வலத்தில் கலைஞர்கள் ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை கோலாட்டம் ஆடியபடி சென்றது காண்போர் ரசிக்கும் வண்ணம் அமைந்தது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை வாகனம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கருட சேவையில் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே