ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராதாபுரம் தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 637 வாக்குகள் பதிவான நிலையில், அதில் அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கு 69 ஆயிரத்து 590 வாக்குகளும், திமுகவின் அப்பாவு-வுக்கு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் கிடைத்ததாகவும், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
18 சுற்றுகள் முடிவில் ஆயிரத்து 321 வாக்குகள் முன்னிலையில் இருந்த அப்பாவு, கடைசி மூன்று சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
19வது, 20வது, 21ஆவது சுற்றுகளின் முடிவில் அப்பாவு-வுக்கு 7025 வாக்குகளும், இன்பதுரைக்கு 9 ஆயிரத்து 58 வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணைய தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி மூன்று சுற்றுகளில் இன்பதுரை பெற்ற உண்மையான வாக்குகள் 8710 தான் என்றும், மீதமுள்ள வாக்குகள் கூடுதலாக வழங்கப்பட்டது என்றும் குற்றஞ் சாட்டுகிறார் அப்பாவு.
19 ஆவது சுற்றில் 50 வாக்குகள், 20 ஆவது சுற்றில் 131 வாக்குகள், 21 ஆவது சுற்றில் 165 வாக்குகள் என இன்பதுரை பெற்றதைவிட மொத்தம் 348 வாக்குகளை அதிகம் சேர்த்து 9 ஆயிரத்து 58 வாக்குகள் பெற்றதாக அறிவித்ததாக அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 சுற்றுகள் முடிவில் 1321 வாக்குகள் முன்னிலையில் இருந்து தான் இந்த குளறுபடி காரணமாக கடைசி மூன்று சுற்றுக்களையும் எண்ணிய பிறகு 712 வாக்குகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக கூறுகிறார் அப்பாவு.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அப்பாவுக்கு 863 வாக்குகளும், இன்பதுரைக்கு 200 வாக்குகளும் கிடைத்ததாகவும், 300 செல்லாதவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் மூலம் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். கடைசி மூன்று சுற்றுகளில் இன்பதுரைக்கு கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டதும் செல்லக்கூடிய 200 தபால் வாக்குகளை செல்லாது என அறிவித்ததுமே தன் தோல்விக்கு காரணம் என அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.