ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

பொய் பிரச்சாரத்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முடியாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுமைத்திறனில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவை தாங்கிக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் மனம் புழுங்கி அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார். 

தேசிய மக்கள் தொகை பதிவேடு தான் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட எதையும் செய்ய தயாராக இருக்கும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 

2016-ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை முன்னிலைப்படுத்தியதால் கிடைத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையால்தான் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறாரே தவிர தனது சொந்த செல்வாக்கால் பெறவில்லை என விமர்சித்துள்ள அவர், இலங்கை தமிழர்கள் வாழ்வில் எண்ணற்ற துயரங்களை ஏற்படுத்திய ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் இலங்கை தமிழர் நலன் குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் தனது உழைப்பு, பண்பு, பணிவால் என்றைக்கும் ஓங்கி நிற்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே