பஞ்சாப் மாநில ‘ஐகான்’ : நடிகர் சோனு சூட் நியமனம்..!!

நடிகர் சோனு சூட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் கவுரவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார்.

பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். 

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட்டின் நல உதவிகளைப் பாராட்டி சக நட்சத்திரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவிக்கக் கோரி பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே