புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல இ பாஸ் தேவையில்லை. பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரவும் இ பாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழாம் கட்டமாக வரும் 31ஆம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது.

அதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்குச் செல்லும் போது ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக அவசரப் பயணங்களுக்காக மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நடைமுறையால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இ பாஸ் நடைமுறையில் சில தளர்வுகளை கொண்டு வந்தது தமிழக அரசு.

அதன்படி இ பாஸ் பெறுவது எளிதானது பலரும் சொந்த ஊர் திரும்பினர். சொந்த ஊரில் தங்கியிருந்தவர்கள் வேலை செய்த இடங்களுக்கு சென்றனர்.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் எழுந்ததைத்தொடர்ந்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லா, கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில், “மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கவும் தடைகள் கூடாது என மத்திய அரசின் தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றன.

எனவே மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க சிறப்பு அனுமதி, இ-பாஸ் போன்றவை தேவையில்லை. மாநில அரசின் கட்டுப்பாடுகள், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இனி இ பாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை அரசு ரத்து செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே