புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் ! சட்டப்பேரவை ஒத்திவைப்பு

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பங்கேற்றுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறை.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை அரங்கம் முற்றிலுமாக மூடப்பட்டு, இன்றைய (சனிக்கிழமை) நிகழ்வு தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி பந்தலில் நடைபெற்றது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆறாவது நாளான இன்று நிதி நிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. 

இந்த திறந்த பேரவையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

கொரோனா காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், மூன்று தினங்களுக்குப் பின்னர் சட்டமன்றத்தை நடத்த அதிமுக கோரிக்கை வைத்த நிலையில், தற்போது கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, “சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாக ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திறந்தவெளி சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

“மானியக்கோரிக்கை மீது விவாதம் நடத்தி இன்று‌ மற்றும் நாளை இரண்டு தினங்கள் பேரவையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதியானதால் பேரவை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்வருடன் ஆலோசனை செய்து திறந்தவெளியில் கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.

இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தி, நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இந்த கூட்டத்தை இன்றுடன் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளளோம்,” என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே