நிவர் புயல் பாதிப்பால் வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

ஏரியை திறக்கும்போது கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், 16 மாவட்டங்களுக்கு நாளை (நவ.,26) விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.

சென்னையில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக ஏரியில் இன்று விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ‘நிவர் புயல் காரணமாக நாளை (நவ.,26) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இதற்கான அரசாணை சிறிது நேரத்தில் வெளியிடப்படும்,’ என தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்த்து, விடுமுறை விடப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புயல், மழை, வெள்ள பாதிப்புகளின் போது தமிழகத்தில் இதுவரை இருந்த எந்த முதல்வரும் நேரில் ஆய்வு செய்ததில்லை.

ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியை தற்போதைய முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே