தகவல் தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் நாளை(வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 3.41 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது.
கரோனா காரணமாக 11 மாதங்களாக தடைபட்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) ஆய்வுப் பணிகள், கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.
அதன்படி, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டானது கடந்த மாதம் 7-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் இஓஎஸ் – 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது.
அந்த செயற்கைக்கோளில் உள்ள சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதனுடன் சோத்து, லிதுவேனியா நாட்டை சோந்த ஒரு செயற்கைக்கோள், லக்சம்பா்க் மற்றும்அமெரிக்காவைச் சோந்த தலா 4 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அது வரும் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. ஆறு உந்து விசை சக்தியுடன் (6 ஸ்ட்ராப் ஆன்ஸ்) அந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தொழில்நுட்பத்தில் அனுப்பப்படும் 22-ஆவது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்படும் 77-ஆவது ராக்கெட் இது என்பதும் முக்கிய அம்சமாகும்.
அதன் வாயிலாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளானது தகவல் – தொடா்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியப் பரப்பிலும், அந்தமான்-நிகோபா், லட்சத் தீவுகளிலும் பயன்படுத்த இயலும்.
பிஎஸ்எல்வி சி-50-க்கு பிறகு, எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எ’ஃ’ப் -10 என பல்வேறு ஆய்வு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தவிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.