2020ஆம் ஆண்டின் கடைசி சூரியகிரகணம், வளைவடிவ சூரிய கிரகணமாக இன்று தெரிந்தது. இதனை பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு ரசித்தனர்.

பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றது.

அதேபோல் சூரியனை பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது.

இந்த இயற்கையான நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது நிலவு, சூரியனை மறைக்கிறது.

இதனால் நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

நீள்வட்ட பாதையில் சூழல்வதால் பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான இடைவெளியும், சூரியனுக்கும், நிலவுக்கும் இடையிலான இடைவெளியும் தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது.

இந்த சமயம் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணம் நடந்து வருகிறது.

கடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் அதெற்கென உள்ள பிரத்யேக கருவி மூலம் பார்த்து வருகின்றனர்.

அதன் மூலம் மக்கள் கிரகணத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடுத்த மூன்றரை மணி நேரம் நீடிக்கும் இந்த கிரகணம், முற்பகல் 11 மணி 16 நிமிடம் தொடங்கி விலகத் தொடங்கும். பிறை வடிவிலான இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தென்படும்.

கிரகண நிகழ்வின் போது சரியாக காலை 9:31 மணிக்கு நிலவு, சூரியனுக்கு மையப்புறத்தில் வரும்.

அப்போது வளைய சூரிய கிரகணம் என்ற வானியல் அற்புதம் நிகழும்.

2 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த கண்கொள்ளா காட்சியை தமிழகத்தில் கோவை, ஊட்டி, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல்,மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பகுதி கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே