கரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்களுக்குச் சேரவேண்டிய இழப்பீடுகளை வழங்குக: அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (மார்ச் 25) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதம்:

மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்களை தலைநகரான சென்னைக்கு பெருகி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மாற்றுப்பணிக்கு அழைத்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டதை அறிகிறோம். தற்போது இந்திய அளவிலும் தமிழகத்திலும் கரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலையின் அறிகுறிபோல நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியது.

கரோனா உலகளாவிய பெருந்தொற்றின் முதல் அலையை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த 18 ஆயிரம் அரசு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், பயிற்சி மருத்துவர்களும் திறம்பட பணியாற்றி மனிதநேயத்தோடு தமிழக மக்களுக்கு கேடயம் போல் விளங்கினார்கள் என்பது வரலாறு. அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் அரசு மருத்துவர்கள் மருத்துவ இறையாண்மையைப் பின்பற்றி பணியாற்றினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த ஓராண்டாக அரசு மருத்துவர்கள் தொடர் பணிச்சுமைக்கு ஆளாகி கரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர்.

அன்றைய சூழ்நிலையில் கரோனா காலத்தில் ஊரடங்கு காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாத கரோனா அல்லாத நோய்களுக்கும் தேக்கி வைத்ததன் விளைவாக அதைச் சரிசெய்ய வேண்டிய இரட்டைப் பணிச்சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் அரசு மருத்துவர்கள் மிகவும் நலிவுற்றிருக்கிறார்கள் என்பதே எதார்த்தம்.

கரோனா பெருந்தொற்றின் முதல் அலையைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முனைந்தபோது அரசு மருத்துவர்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் குடும்ப நலன்களைப் பாதுகாக்கவும் அரசு அறிவித்த ஒரு மாதம் ஊக்க ஊதியம், கரோனா தொற்று ஏற்பட்டால், 2 லட்சம் சிகிச்சை நிதி, கரோனா போரில் உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு என்று அரசு அறிவித்த எந்த இழப்பீடும் இதுவரை அரசு மருத்துவர்களைச் சென்றடையாதது அரசு மருத்துவர்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முறையான உணவு, முறையான தங்குமிடம், பாதுகாப்புக் கவசம், தனிமைப்படுத்துதல் விடுப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அரசு மருத்துவர்கள் அல்லல்பட நேர்ந்ததை யாரும் மறக்கவில்லை.

கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு முன் முதல் அலையின்போது அரசு மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களைச் சரிசெய்தும், அவர்களுக்குச் சேர வேண்டிய இழப்பீடுகளைக் கொடுத்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

தற்போது அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணிகளோடு கரோனா அல்லாத நோய்களுக்கு கிசிச்சை அளித்து வருகிறோம். இந்தச் சூழ்நிலை மருத்துவர்களின் இரட்டைச் சுமையைக் குறைக்க சுகாதாரத் துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்.

8 கோடி பேர் வசிக்கின்ற தமிழகத்தில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப போதுமானது அல்ல. 4 (D) 2 குளறுபடியால் மருத்துவர்கள் பணியிடங்கள் ஏறக்குறைய 600க்கு மேல் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டுமென்று போராடியதை நினைவுகூர்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

மேற்கண்ட எங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும் பணியில் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேர்ந்தாலோ உயிரிழப்பு ஏற்பட நேர்ந்தாலோ தமிழக அரசு பொறுப்பேற்குமா என்பதை உறுதி செய்துவிட்டு மாற்றுப்பணி உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மருத்துவ அவசரப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்ய கோரிக்கை விடுக்கிறோம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே