வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை – பாஜக சி.டி.ரவி பேட்டி..!!

ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளரான சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கருப்புப்பணம் வைத்துள்ளவர்களே கவலைப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “வருமான வரித்துறையினர் சுதந்திரமான அமைப்பு. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபடுகின்றனர். 

வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து கருப்புப்பணம் வைத்துள்ளவர்களே கவலைப்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்பு சம்பந்தமான செய்தியாளர்களின் கேள்விக்கு, “கருத்துக்கணிப்பு என்பது ஆரூடம் மட்டுமே. கடந்த 2016ல் திமுகதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றனர். ஆனால், அதிமுகதான் வெற்றி பெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய பின்புலமும் கொண்டவர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பின்புலமும் கொண்டவர். மக்கள் ஆராய்ந்து ஓட்டு போடுவார்கள்.

கட்டப்பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்டவை வேண்டுமென்றால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.” என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இலங்கை தமிழர்களுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கிறது. தற்போது வரை இலங்கை தமிழர்களின் உட்கட்டமைப்புக்காக இந்தியா ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது.

கச்சத்தீவை தாரை வார்த்த்து திமுகவும், காங்கிரசும்தான். ‘கோ பேக்’ மோடி என்று சொன்னாலும் 11 மருத்துவக்கல்லூரிகள், 12 ஸ்மார்ட் சிட்டி, முத்ரா கடன் திட்டத்தில் அதிக பயன் என இம்மாநிலத்திற்குதான் அதிக திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

மாற்றுக்கட்சியிலிருந்து பா.ஜ.கவிற்கு வந்த அரசியல்வாதிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மாற்றுக்கட்சியிலிருந்து பா.ஜ.கவிற்கு வந்தவர்களுக்கு ஜெயிக்க வாய்ப்பு இருந்ததால் மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும்; ஜாதி, மத வேறுபாடின்றி பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்துகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜக்கி வாசுதேவ் கோயில்களை சீரமைப்போம் திட்டத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் சி.டி.ரவி கூறியுள்ளார். முன்னதாக இன்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வ.வேலு வீட்டில் வருவமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே