தெலங்கானாவில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை புதைக்கத் தடை

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்ற விவகாரம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் 4 பேரின் உடல்களை வரும் திங்கள்கிழமை வரை பாதுகாத்து வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்ற பாஷா, ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் , சின்னகுண்ட்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் திஷாவை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினர் என்பது உறுதியானது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

சிறையிலேயே 4 பேரிடம் காவல்துறையினர் மாறி மாறி விசாரணை நடத்தினர். 4 பேரிடமும் கூட்டாகவும், தனித்தனியாகவும் விசாரணை நடத்தி, திஷா கொல்லப்பட்டது குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.

பெண் மருத்துவர் திஷாவை 4 பேரும் எப்படி கடத்திச் சென்றனர் என்பதை நடித்துக் காட்டச் சொல்லிய போலீசார், பின்னர் திஷாவை எரித்துக் கொன்ற ரங்காரெட்டி மேம்பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

பெண் மருத்துவரை எரித்துக் கொன்றதை அதிகாலை சுமார் மூன்றரை மணியளவில் நடித்துக் காட்டிய 4 பேரில் ஒருவரான முகமது பாஷா திடீரென காவல் அதிகாரி ஒருவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, போலீசாரை மிரட்டியுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட போலீசார் துப்பாக்கியை திருப்பித் தருமாறு விடுத்த எச்சரிக்கையையும் மீறி, அவர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.

இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கேசவலு, சிவா, நவீன் ஆகிய மற்ற மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களின் பின்னால் முகமது பாஷாவும் ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த காவல்துறையினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து, 4 பேரையும் எச்சரித்துள்ளனர்.

அப்போது மீண்டும் அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார் முகமது பாஷா.

நிலைமை கைமீறிவிட்டதை உணர்ந்த போலீசார், 4 பேரையும் என்கவுன்டர் செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த 4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தப்பியோடியபோது முகமது பாஷா துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த போலீசார் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திஷாவின் மரணத்திற்கு நீதி கிடைத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, என்கவுண்டர் நடந்த இடத்துக்குச் சென்ற காவல்துறை உயரதிகாரிகள், தடயங்களைச் சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் புதைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் என்கவுன்டரில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் 15 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனை விசாரித்த நீதிபதிகள், 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதை ஒளிப்பதிவு செய்யவும், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

வரும் திங்கள்கிழமை மாலை வரை உடல்களை புதைக்காமல் பாதுகாத்து வைத்திருக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே