தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.250 கட்டணமாக வசூலிக்கலாம்: தமிழக அரசு

கொரோனா தடுப்பூசிக்காக தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கலாம் என்றும், இதில் 150 ரூபாய் தடுப்பு மருந்தின் விலையாகவும், சேவை கட்டணமாக 100 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் கோவின் 2.0 செயலி மூலமோ அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகள் மூலமோ அரசு அல்லது தனியார் மருத்துவமனை பெயர்களை விருப்பம் போல் தேர்வு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருப்பவர்கள் இணை நோயுள்ளது என்பதை உறுதி செய்ய மருத்துவர் சான்றிதழை பெற்றுத் தர வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தர வேண்டியிருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 தனியார் மருத்துவமனைகள், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசின் கீழ் உள்ள பிற தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே