வேகப்பந்து பிட்சில் 47, 60-க்கு ஆல் அவுட் ஆகவில்லையா? ஸ்பின் பிட்ச்னா ஏன் இந்தக் கதறல்?- குழிபிட்சுக்கு ஆதரவு தரும் நேதன் லயன்

இரவு பூராவும் டிவியில் போட்டிகளைப் பார்த்தேன். பிரமாதமான டெஸ்ட் போட்டி. அகமதாபாத் பிட்ச் தயாரிப்பாளரை சிட்னிக்குக் கொண்டு வரலாமா என்று யோசிக்கிறேன்.

சென்னை, அகமதாபாத் பிட்ச் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாக, குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வெளுத்து வாங்க இங்கிலாந்தின் பரமவைரியான ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் நேதன் லயன் ஏன் இங்கிலாந்து கதறுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் குழிப்பிட்சை போடுவதற்கு எதற்கு பகலிரவு டெஸ்ட், பிங்க் பந்து டெஸ்ட் என்ற பம்மாத்து என்பதே நேதன் லயனுக்குப் புரியவில்லை. மேலும் குழிப்பிட்ச்சுக்கும் ஸ்பின் பிட்சுக்கும் உலகின் தரமான ஒரு ஸ்பின்னருக்கே வித்தியாசம் தெரியவில்லை என்பது அறியாமை என்பதை விட இந்திய பிட்ச்களுக்கு முட்டுக்கொடுப்பதாகவும் அடுத்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைச் சாய்க்க மனரீதியாக அவர்களைக் காயப்படுத்தும் இரட்டை நோக்கம் கொண்டதாகவும் கருத இடமுண்டு.

இதே ஆஸ்திரேலியா இங்கு வந்து இப்படித் தோற்றால் நேதன் லயன் பேச்சு இப்படியிருக்குமா என்பது சந்தேகமே.

இந்நிலையில் அவர் பிட்ச் விமர்சகர்களை நோக்கிக் கூறியிருப்பதாவது:

நாம் வேகப்பந்து, ஸ்விங் ஆடுகளங்களில் உலகம் முழுதும் ஆடி 47, 60 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட் ஆகியிருக்கிறோம், அப்போதெல்லாம் யாரும் எதுவும் வாயைத்திறப்பதில்லை.

ஆனால் ஸ்பின் ஆகத் தொடங்கியவுடன் உலகில் அனைவரும் கதறுகின்றனர் ஏன்? எனக்கு இது புரியவில்லை., ஒரு ஸ்பின்னராக நான் இத்தகைய பிட்ச்களை ஆதரிக்கிறேன். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நல்ல விறுவிறுப்பாக, பொழுதுபோக்காக உள்ளன.

இரவு பூராவும் டிவியில் போட்டிகளைப் பார்த்தேன். பிரமாதமான டெஸ்ட் போட்டி. அகமதாபாத் பிட்ச் தயாரிப்பாளரை சிட்னிக்குக் கொண்டு வரலாமா என்று யோசிக்கிறேன்.

இங்கிலாந்து ஏன் ஒரே ஸ்பின்னர் ஜாக் லீச்சுடன் ஆடியது, 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஏன் வைத்திருந்தனர். இந்தத் தவறு அவர்களுடையது. இந்தியா 3 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்யும்போதே ஜோ ரூட் புரிந்து கொண்டிருக்க வேண்டமா?

இவ்வாறு கூறினார் நேதன் லயன்.

இந்திய தரப்பிலும் சமீபத்தில் முன்னாள் ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா, கூறும்போது, “ஸ்டூவர்ட் பிராட் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிட்சை பாருங்கள், அது என்னமாதிரியான பிட்ச்? வேகப்பந்து வீச்சு எடுத்து 3 நாட்களில் முடிந்தால் அது பிரமாதம், ஆனால் ஸ்பின் பிட்ச்சில் டெஸ்ட் 2நாட்களில் முடிந்தால் அது மோசமா? உடனே அது 5 நாள் பிட்ச், அல்ல, டெஸ்ட் பிட்ச் அல்ல என்று கூறுகிறோம்” என்று முட்டுக்கொடுத்ததும் கவனிக்கத்தக்கது.

அஸ்வின் ஒரு படிமேலே போய் ‘நல்ல பிட்ச் என்றால் என்ன?’ என்றே கேட்டு விட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே